சிவகாசி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

சிவகாசி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது.
சிவகாசி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
Published on

சிவகாசி,

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகள் மற்றும் சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட சில பஞ்சாயத்து பகுதிகளுக்கு நெல்லை மாவட்டம் மானூரில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தப்பகுதி மக்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவகாசி அருகே பெரியகுளம் கண்மாய் பாதையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரங்களில் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி அந்த பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் வசிப்போர் வெளி இடங்களில் இருந்து கட்டிட கழிவுகளை கொண்டு வந்து அதில் போட்டு சாலையை கடந்து சென்று வந்தனர்.

தற்போது நீர்கசிவு அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் சகதியாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியை கடந்து செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் சம்பவம் தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து மானூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் திருத்தங்கல் மைக்கேல் கூறியதாவது:-
பிரச்சினை சிறிதாக இருக்கும்போதே நடவடிக்கை எடுத்தால் பாதிப்பு சிறிதாக இருக்கும். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு பிரச்சினையையும் ஆரம்ப நிலையில் சரி செய்ய முயலுவது இல்லை. குடிநீர் வீணாகி வருவது குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் இதுவரை சரி செய்யாமல் இருப்பது அலட்சியம் காட்டுவதாக தோன்றுகிறது. குடிநீர் பிரச்சினையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com