

ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் காரில் சுற்றி திரிவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் கிளாய் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு உள்ள முந்திரி தோப்பில் நின்று கொண்டிருந்த 2 கார்களில் கத்தி, இரும்புக்கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் இருந்தது தெரியவந்தது. அவர் களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, கிளாய் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 35), மணி (29), சரவணன் (30), சத்தியமூர்த்தி (31), சரண்ராஜ் (31), பாலாஜி (31), செல்வபதி (36) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 2 கத்தி, இரும்புகம்பிகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.