

ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பிச்சிபூ தெருவை சேர்ந்தவர் மணி (வயது 20). தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். தொழிற்சாலையில் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மணி அந்த தொழிற்சாலையில் இருந்து பழைய இரும்பு பொருட்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். மணி லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி வந்த லாரி மணி மீது மோதியது. இதில் மணி 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அவரை சகஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மணி இறந்து போன தகவல் அவரது உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் போந்தூர் கிராம மக்கள் மணியின் சாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.