

படப்பை,
படப்பை அடுத்த வல்லம் எச்சூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர், காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கண்டிகை பகுதியில் தங்கி உள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு, நேற்று வேன் ஒன்று தொழிற்சாலை நோக்கி சென்றது.
மாத்தூரில் உள்ள ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை வேன் இழந்தது. சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதாமல் இருக்க வேனை இடது பக்கமாக டிரைவர் திருப்பினார். பின்னர் மீண்டும் வலது பக்கமாக திருப்பினார்.
அந்த சமயத்தில் வேன் உள்ளே இருந்த ஒரு தொழிலாளி வேனில் இருந்து கீழே விழுந்தார். வேனும் அவர் மீது கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வேன் அடியில் மாட்டிக்கொண்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வேன் உள்ளே கதறி கொண்டிருந்த மற்றவர்களை உடனடியாக மீட்டனர். இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவிழ்ந்த வேனை நிமிர்த்தினர். வேன் அடியில் சிக்கி இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் இறந்த நபர் ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் குச்சபாலி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி மகேஷ்வர்மாஜி (வயது 50) என்பது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த டிரைவர் சத்தியா என்கிற சத்யராஜ் (25) என்பவரை கைது செய்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.