ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது

ஆவடி அருகே வடமாநில வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை நண்பர் கைது
Published on

ஆவடி,

சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்பிகாரி (வயது 42). கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதிக்கு வந்த அவர் அங்கேயே தங்கி ஜல்லிக்கற்கள், மணல் விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த திலீப்குமார் (28) என்பவர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ராஜ்பிகாரியும், திலீப்குமாரும் ஒரே அறையில் தங்கி இருந்ததால் இருவருக்கும் இடையே எளிதில் நட்பு மலர்ந்தது.

இதனையடுத்து இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தி வந்தனர். அப்போது ராஜ்பிகாரி, திலீப்குமாருக்கு அதிகமாக செலவு செய்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 9 மணிக்கு திலீப்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார். அப்போது ராஜ்பிகாரி, நான் உனக்கு நிறைய செலவு செய்துள்ளேன். ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டு எனக்கு பணம் தராமல் போகிறாய் என திலீப்குமாரிடம் கேட்டார்.

இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ராஜ்பிகாரி ஊருக்கு செல்வதற்காக நிறுவனத்தில் இருந்து வெளியே நடந்து சென்றார். திலீப்குமாரும் உடன் சென்றார். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது அவர்களுக்கு இடையே தகராறு முற்றியது.

இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ராஜ்பிகாரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். திடீரென ஆத்திரம் அடைந்த திலீப்குமார் அங்கு கிடந்த பெரிய கல்லால் ராஜ்பிகாரியின் தலையில் தாக்கி விட்டு தப்பிச்சென்றார்.

இதில் படுகாயம் அடைந்த ராஜ்பிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

ராஜ்பிகாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசாரின் விசாரணையில் தப்பி ஓடிய திலீப்குமார் ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்டிரல் ரெயில் நிலையம் சென்ற போலீசார் நடைமேடையில் படுத்திருந்த திலீப்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com