

திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது34). இவர் ஆவணம்-கைகாட்டியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 20-ந்தேதி திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு ஆவணம் கை காட்டி நோக்கி இவரும், இவரது நண்பர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரமேஷ் கையில் இருந்த கர்சிப் தவறி சாலையில் விழுந்துள்ளது. இதையடுத்து தனது நண்பரை மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த சொல்லி விட்டு, சாலையில் கிடந்த கர்சிப்பை ரமேஷ் எடுக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ரமேசின் நண்பர் அணவயல் கிராமத்தை சேர்ந்த ஆனந்த வேலவன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் போலீசார் புகார் கொடுத்தவரின் மோட்டார் சைக்கிளை போலீஸ்நிலையத்திற்கு கொண்டுவந்தனர். ஆனால் விபத்து தொடர்பாக தொடர் விசாரணையை மேற்கொள்ளாமல் போலீசார் காலதாமதப்படுத்தியதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் திருச்சிற்றம்பலம் அருகே துலுக்கவிடுதி பஸ் நிறுத்தத்தில், கிராம மக்கள் திரண்டு சாலைகளில் தடுப்புகளை போட்டு நேற்று காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து அணவயல் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரையும் அவர் விசாரணைக்காக அழைத்து சென்றார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழித்தடங்களில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.