

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ண கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் விக்னேஷ் என்பவர் பூசாரியாகவும், திருவண்ணாமலையை சேர்ந்த வனத்தையன் காவலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் விக்னேஷ், வனத்தையன் ஆகியோர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை இருவரும் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தனர். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில் பதறிய இருவரும் கோவிலுக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த உண்டியலை காணவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உண்டியலை தேடி பார்த்தனர்.
அப்போது கோவில் வளாகத்தின் அருகில் அந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் அதன் அருகில் சில்லரை நாணயங்கள் சிதறிக்கிடந்தன. உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். பின்னர் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த உண்டியலில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் எலவனாசூர்கோட்டையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மர்மநபர்கள் கோவில்களை குறிவைத்து திருட்டில் ஈடுபடுவது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.