ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு அனுப்பி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் குழாய்களில் குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் கிராம மக்கள் நடந்து சென்று வயல் வெளிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனை கண்டித்தும், உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தியும் கடந்த 17-ந் தேதி கிராம மக்கள் சீதஞ்சேரி-பென்னாலூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பழுதடைந்த மின் மோட்டாரை உடனே சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனை கண்டித்தும், உடனே குடிநீர் கேட்டும் கிராம மக்கள் நேற்று காலை கூனிபாளையத்தில் சீதஞ்சேரி- பென்னாலூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உடனே அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிதாக அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com