நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய எஜமானர் குடும்பத்தினர் 25 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலி அணிவிப்பு

விஜயாப்புராவில் நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய எஜமானர் குடும்பத்தினர், 25 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியையும் பரிசாக நாயின் கழுத்தில் மாட்டி விட்டனர்.
நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய எஜமானர் குடும்பத்தினர் 25 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலி அணிவிப்பு
Published on

விஜயாப்புரா,

விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தி டவுனை சேர்ந்தவர் சங்கய பத்ரி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சங்கய பத்ரி ஒரு ஆண் நாய் குட்டியை வாங்கி இருந்தார். அந்த நாய் குட்டிக்கு டைகர் என்று பெயரும் சூட்டப்பட்டது. அந்த நாய் குட்டியை சங்கய பத்ரியும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த பாசத்துடன் வளர்த்தனர். இதனால் அந்த நாய் குட்டி வீட்டில் உள்ள உறுப்பினர் போல அனைவரிடமும் சகஜமாக பழகியது. சங்கய பத்ரியும் அவரது குடும்பத்தினரும் எங்கு சென்றாலும் அந்த நாய் குட்டியும் பின்னால் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அந்த நாய் குட்டி பிறந்து நேற்று 3-வது ஆண்டு ஆனது. இதையொட்டி அந்த நாய் குட்டிக்கு சங்கய பத்ரியும் அவரது குடும்பத்தினரும் பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாயின் பிறந்தநாளை கேக் வெட்டி சங்கய பத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நாய்க்கு பிறந்த நாள் பரிசாக சங்கய பத்ரி 25 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை அணிவித்தார். இது பிறந்தநாளில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் பிறந்தநாளில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக உப்புமா வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்கய பத்ரி கூறுகையில், டைகர் எங்கள் வீட்டின் ஒருவர் போல ஆகிவிட்டான். இதனால் அவனது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தோம்.

அதன்படி கேக் வெட்டியும், அனைவரையும் அழைத்தும் பிறந்தநாள் கொண்டாடினோம். மேலும் 25 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியையும் அவனுக்கு பரிசாக கழுத்தில் அணிவித்தோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com