ரூ.1.18 கோடியில் புதிய ரவுண்டானா, கூடைப்பந்து மைதானம், பல்நோக்கு கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருச்சி மாநகரில் ரூ.1.18 கோடி செலவில் புதிய ரவுண்டானா, கூடைப்பந்து மைதானம், பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
ரூ.1.18 கோடியில் புதிய ரவுண்டானா, கூடைப்பந்து மைதானம், பல்நோக்கு கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
Published on

திருச்சி,

திருச்சி மாநகர போலீஸ் ஆயுதப்படை வளாகத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மேல்சபை உறுப்பினர் ஆகியோர் நிதியில் இருந்து ரூ.85 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.22 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் மின்னொளி கூடைப்பந்து மைதானம், தனியார் நிதி பங்களிப்புடன் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் புதிய ரவுண்டானா, ஜமால் முகமது கல்லூரி அருகில் கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் நிழற்குடை, பல்நோக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மொத்தம் ரூ.1 கோடியே 18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம், புதிய ரவுண்டானா மற்றும் கூடைப்பந்து மைதானம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தனர்.

குறைந்த விலையில் உணவு

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், திருச்சி மாநகர வளர்ச்சியிலும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதிலும் மாநகர போலீஸ் கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாபெரும் சக்திகளாக செயல்பட்டு வருகிறார்கள். திருச்சியை நேர்த்தியான, எழில் மிகுந்த மாநகராட்சியாக மாற்றுவதில் தொலைநோக்கு சிந்தனையுடன் கண் துஞ்சாது அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். மாநகர வளர்ச்சியில் எனது பங்கு எப்போதும் உண்டு என்றார்.

கலெக்டர் சிவராசு பேசுகையில், ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள பல்நோக்கு மையத்தில் உள்ள உணவகத்தில் கட்டுப்படியான விலையில் பொதுமக்களுக்கு தரம், சுவையுடன் உணவு வழங்க வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நிழற்குடையில் தனியார் பங்கு மட்டும் இல்லாமல், பொதுமக்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும். திருச்சி மாநகர வளர்ச்சிக்கும், புறநகர பகுதி வளர்ச்சிக்கும் நன்கொடையாளர்கள் உதவி அவசியம். எனவே, இன்னும் அதிக நிதி உதவி அளித்திட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊர்க்காவல்படை வட்டார தளபதி சிராஜிதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com