ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரிக்‌ஷா தொழிலாளர்கள்

ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல் லாததால் வாழ்வாதாரம் இன்றி பரிதவிப்பதாக சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தினமும் இலவச உணவை எதிர்பார்த்தே நாட்களை நகர்த்துவதாகவும் புலம்புகிறார்கள்.
ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரிக்‌ஷா தொழிலாளர்கள்
Published on

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி வருவோர் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் செயல்பாட்டு நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலையோர வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதேபோல் மக்கள் நடமாட்டத்தை வைத்தே தினமும் காசு பார்க்கும் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் நடமாட்டமே சைக்கிள் ரிக்ஷா தொழிலுக்கு பிரதானம். இவர்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் வருமானம்தான் இவர்களது குடும்பத்துக்கு ஆதாரம். தற்போது வருமானம் இல்லாததால் இவர்களில் பெரும்பாலானோர் சாலைகளிலேயே தங்கி இருப்பதாகவும், தினமும் இலவச உணவை எதிர்நோக்கியே வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் லோகநாதன் (வயது 57) என்பவர் கூறியதாவது:-

சென்டிரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் ரிக்ஷா தொழிலை நம்பியே உள்ளனர். சென்டிரலுக்கு செல்லவும், சென்டிரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல விரும்பும் பூ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பெட்டிக்கடை வியாபாரிகள் போன்றோர் சைக்கிள் ரிக்ஷாவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். குறைந்தபட்சம் ரூ.20 முதல் அதிகபட்சம் ரூ.50 வரை கூலி பேசி சுமையை எடுத்துச் செல்வோம். மக்கள் நடமாட்டத்தை பொறுத்தே எங்களின் வாழ்க்கை சக்கரமும் சுழன்று வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியே நடமாடுவதே இல்லை. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. எங்கள் தொழிலும் படுமோசமாகி விட்டது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு சென்றால் அன்றாட செலவுக்காக காசு கேட்கும் குடும்பத்தாரை எப்படி சமாளிப்பது? என்றே தெரியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக சாலையிலேயே தங்கியுள்ளோம். கிடைக்கும் உணவை சாப்பிட்டு வாழ்க்கை நகர்த்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், தினமும் சாலையில் சிலர் கொடுக்கும் இலவச உணவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கிடைக்கும் உணவுகளை சேமித்து வீட்டுக்கு எடுத்து செல்லும் நிலையும் தொடர்கிறது. வருமானம் இல்லாததால் மிகுந்த வேதனையில் வாழ்கிறோம். இந்த நிலை என்று மாறுமோ? தெரியவில்லை என்றார்.

சாலையோர வியாபாரிகள் மற்றும் தங்களைபோல கூலித்தொழிலாளர்களுக்கு அரசு தகுந்த உதவிகளை செய்யவேண்டும் என்பதே சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக... என உற்சாகமாக பெடலை அழுத்தி சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டியவர்கள், தற்போது சாலையோரங்களில் தூங்கி காலத்தை கழித்து வருவது வேதனையே.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com