தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை: கவர்னரை குறை கூறியே நாராயணசாமி காலம் கடத்துகிறார் ரங்கசாமி குற்றச்சாட்டு

கவர்னரை குறை கூறியே நாராயணசாமி காலம் கடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று ரங்கசாமி குற்றம்சாட்டினார்.
தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை: கவர்னரை குறை கூறியே நாராயணசாமி காலம் கடத்துகிறார் ரங்கசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கியவுடன், எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி மற்றும் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் உரையை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

இதனைதொடர்ந்து சட்டசபை வளாகத்தில் ரங்கசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது கவர்னர் உரை நிகழ்த்துவது மரபு. ஆனால் இன்று (நேற்று) காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியபோது கவர்னர் உரை இடம் பெறவில்லை. பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் கவர்னர் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அப்போது தான் இந்த பட்ஜெட் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கவர்னர் உரை இல்லாமல் நிதிநிலை அறிக்கையை வாசிப்பது குழப்பமான சூழலை உருவாக்கும். கவர்னர்- ஆட்சியாளர்கள் மோதல் போக்கினால் புதுவை 5 ஆண்டு பின்நோக்கி சென்றுள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடியை குறை கூறியே காலம் கடத்தி வருகிறார். எல்லா திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறிவருகிறார்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. காங்கிரஸ் அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை தருவோம் என கூறினார்கள். இது சாத்தியமா என்று கூட யோசிக்காமல் வாக்குறுதி கொடுத்தனர். இதுவரை ஒருவருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. ஆனால் பலரை வேலையில் இருந்து நீக்கி உள்ளனர்.

கூட்டுறவு பெட்ரோல் பங்குகள், சர்க்கரை ஆலை ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை கூட புதிதாக கொண்டு வரவில்லை. மாறாக தொழிற் சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள், விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனர்.

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதை அரசு காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முதலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்பின் எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. கவர்னர்- முதல்-அமைச்சரின் அதிகார போட்டியால் புதுவை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இருவரும் அதிகார போட்டியை நிறுத்திவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். கவர்னர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் செயல். இதனை கண்டித்து நாங்கள் வெளி நடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com