வடகிழக்கு பருவமழை தீவிரம் எந்த நிலையையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் எந்த நிலையையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் எந்த நிலையையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
Published on

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தானம்நகரில் மழைநீர் தேங்கிய வீடுகளை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டார். அப்போது தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. 10 தாலுகாக்களில் ஒரு சில இடங்களில் மட்டும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கடலூரில் தானம்நகர், நவநீதம்நகர், கே.என்.பேட்டை போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவின் பேரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் பேரை முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் எந்த இடத்திலும் போக்குவரத்து பாதிப்பு இல்லை. மின் தடை இல்லை.

என்.எல்.சி.க்கு சொந்தமான சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் பரவனாற்றில் அதிக அளவில் நீர்வரத்து காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடிதண்ணீரும், பெருமாள் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடிதண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் தண்ணீரால் விளை நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் வேளாண்மை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கனமழையை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருக்காமல் அருகில் உள்ள முகாமுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 18 குழுவினரும் பொக்லைன் எந்திரம், அறுவை எந்திரம் போன்ற பல்வேறு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 233 முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. எந்த நிலையையும் எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.,

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, நகரசபை ஆணையர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com