குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா

திருவள்ளூரில் குடிநீர் வசதி செய்துதரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்குட்பட்டது நந்திமங்கலம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் புதுச்சேரி, அருந்ததி காலனி, பிரசன்ன ராமேஸ்வரம், நந்திமங்கலம் என பல கிராமங்கள் உள்ளது. நந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல் பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் குடிநீரை பயன் படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் நந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதியும் முறையாக செய்துதரப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க கோரியும், குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து, அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பொதுமக்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com