பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

குடிநீர் வழங்காததை கண்டித்து சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
Published on

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி எம்.வாடிப்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிதண்ணீர் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. எனவே குடிநீர் வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவர்கள் எம்.வாடிப்பட்டி பகுதியில் உள்ள தெருக்களுக்கு லாரிகள் மூலமாக உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், கோபால சமுத்திரம் கண்மாயில் ஆழ் குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய வேண்டும், மருதாநதி அணை பகுதியில் குடிநீர் தேவைக்காக நடைபெறும் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்களுடன் சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செயல் அலுவலர் சக்திவேல் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. கோடை கால குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்காக மருதாநதி அணையில் ஆற்றுப்படுகையில் பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் கிணறு தோண்டும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தற்போது கிணற்றை சுற்றி உறைபோடும் பணி நடைபெற்று வருகின்றது. இன்னும் 15 நாட்களில் இந்த பணி நிறைவடைந்ததும் சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள வார்டுகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com