சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிக்காக வாடகைக்கு டிராக்டர் எடுத்து வர கூறிய அதிகாரிகள்

வலங்கைமான் அருகே சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிக்காக வாடகைக்கு டிராக்டர் எடுத்து வரும்படி அதிகாரிகள் கூறியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிக்காக வாடகைக்கு டிராக்டர் எடுத்து வர கூறிய அதிகாரிகள்
Published on

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்று வீசியது. இதில் அப்பகுதியில் இருந்த அரச மரம் முறிந்து விழுந்ததில் 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் தென்குவளவேலி மெயின்ரோடு, கீழத்தெரு, பிள்ளையார்கோவில் தெரு, மேலத்தெரு, தெற்குத்தெரு, கள்ளர் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் தடைபட்டது. மின்சாரமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதேபோல் தென்குவளவேலியை சுற்றி உள்ள பல கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. இதனால் மிக்சி, கிரைண்டர், மின்மோட்டார் உள்ளிட்டவற்றை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

குறைந்த மின்னழுத்தம் காரணமாக பல வீடுகளில் மின்சாதனங்கள் பழுதடைந்து விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இப்பகுதிகளில் தெருவிளக்குகளும் எரியவில்லை.

இதுதொடர்பாக தென்குவளவேலி கிராம மக்கள் ஆலங்குடி கிளை மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுங்கள் என மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றோம்.

அப்போது அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியின்போது புதிய மின்கம்பங்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ஏற்றி செல்வதற்கு டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துவரும்படி கூறினர். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறோம். மின்வினியோகம் இல்லாததால் இப்பகுதியில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com