

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் கே.எம்.சரயு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) மனோகரன், தோடக்கக் கலைத்துறை துணை இயக்குனர் அருணாச்சலம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.
விவசாயி செல்லத்துரை, தென்னை விவசாயிகளின் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தைலமரங்களையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி தனபதி, காவிரி லாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். வெள்ளாறு, பாம்பாற்றில் அரசு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம்
விவசாயி மிசா மாரிமுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், டெல்டா பகுதி முற்றிலும் பாலைவனமாக மாறிவிடும். உச்சநீதிமன்ற தீர்பை மத்திய அரசு அமல்படுத்த முன்வர வேண்டும். தமிழக அரசு இதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும்.
விவசாயி அண்ணாத்துரை, அறந்தாங்கி பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டா வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி பவுன்ராஜ், கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடைபெறவில்லை. அதனை நியாயமாக நடத்த வேண்டும். சொட்டு நீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே விரைந்து சொட்டு நீர் பாசன பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி துரைமாணிக்கம், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லை. ஆவுடையார்கோவில் பகுதியில் வறட்சி அதிகமாக உள்ளது. இதனால் மண்ணை சோதனை செய்து குறைந்த தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களை சாகுபடி செய்ய வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி நாகையா, இந்த ஆண்டு கால்நடைத்துறைக்கு குறைந்து அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி அத்தானி ராமசாமி, கல்லணை கால்வாய் பாசனத்தை பெறும் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஒருநாள் முழு அடைப்பு நடத்தப்பட வேண்டும். என்றார். இதைத்தொடர்ந்து பல விவசாயிகள் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து பேசிய கலெக்டர் கணேஷ் பேசுகையில், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.