காவிரி பிரச்சினையில் உரிமையை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்

காவிரி நீர் பிரச்சினையில் நமது உரிமையை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காரைக்கால் விவசாயிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தினார்கள்.
காவிரி பிரச்சினையில் உரிமையை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்துக்கு 7 டி.எம்.சி. காவிரி நீர் வழங்கவேண்டும் என்றும் இதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த கூட்டத்தில் புதுவை சார்பில் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து காரைக்கால் பகுதி விவசாயிகளிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று கருத்துகேட்டனர். கூட்டத்தில் அரசு கொறடா ஆனந்தராமன் எம்.எல்.ஏ., வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் 4வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தி கூறியதாவது.

சுப்ரீம் கேர்ட்டு தீர்ப்புப்படி காரைக்கால் மாவட்டத்துக்கு 7 டி.எம்.சி. காவிரி நீரை பெற அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கடந்த காலங்களில் காரைக்கால் மாவட்டத்துக்கு உரிய நீரை தமிழகம் வழங்கியதில்லை. அதுமட்டுமில்லாமல் காரைக்காலுக்கு வரக்கூடிய காவிரி நீரை தடுப்பதற்கான நடவடிக்கைகள்தான் எடுக்கப்பட்டன. காவிரி ஆற்றின் கிளை ஆறுகளாக நூலாறு, நாட்டாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு ஆகியவை உள்ளன. இந்த ஆறுகளின் குறுக்கே 7 படுகை அணைகளை தமிழக அரசு புதுவை அரசின் அனுமதியின்றி கட்டியுள்ளது. இதனால் காரைக்காலுக்கு கிடைக்கவேண்டிய காவிரி நீர் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

முன்பு மேட்டூர் அணை திறந்த ஒரு வார காலத்திற்குள் காரைக்காலுக்கு காவிரி நீர் வந்துவிடும். ஆனால் இப்போது அணை திறக்கப்பட்டு ஒரு மாதமானாலும் புதுச்சேரிக்கு காவிரி நீர் வருவதில்லை. எனவே நமது உரிமையை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுச்சேரிக்கு கிடைக்கும் நீரை அளவிட தனியாக ஒரு குழு அமைக்கவேண்டும். புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அதிகாரிகளிடம் பேசி உரிய நீரை பெறுவதில் சங்கடம் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

விவசாயிகளின் கருத்துகளை கேட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com