ரம்ஜான் தினத்தன்று கூட்டு தொழுகைக்கு அனுமதி இல்லை - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

ரம்ஜான் தினத்தன்று கூட்டு தொழுகைக்கு அனுமதி இல்லை என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
ரம்ஜான் தினத்தன்று கூட்டு தொழுகைக்கு அனுமதி இல்லை - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசு 4-வது கட்ட ஊரடங்கு விதிமுறைகளை வெளியிடும். அதை நாங்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இதை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் தொழில் நடவடிக்கைகளை முடக்கி, மற்ற பகுதிகளில் அவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

சிவப்பு மண்டலங்களிலும் தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கம் ஆகும். கொரோனாவை தடுக்கும் பணிகளுக்காக நாம் 2 மாதங்களை எடுத்துக் கொண்டு விட்டோம். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புவதற்கான நேரம் வந்துள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், வைரசுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அதாவது வைரசை கட்டுப்படுத்தும் பணிகளும் நடைபெற வேண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.

எடியூரப்பாவை பாராட்டுகிறேன்

அடுத்து வரும் சவால்களை சந்திக்கவும் அரசு தயாராக உள்ளது. ஆஷா ஊழியர் களுக்கு தலா ரூ.3,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடியூரப்பாவை நான் பாராட்டுகிறேன். ரம்ஜான் தினத்தில் கூட்டு தொழுகைக்கு அனுமதி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.எம்.இப்ராகிம் கேட்டு இருப்பது சரியல்ல. இதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்க மாட்டோம். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு அனுமதி கேட்பது சரியல்ல. உணர்வுபூர்வமான விஷயத்தை எழுப்பி அரசியல் செய்வது தவறு.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com