தேசிய நெடுஞ்சாலையில் 70 சதவீத மின்விளக்குகள் எரியவில்லை வாகன ஓட்டிகள் அவதி

பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை தேசிய நெடுஞ்சாலையில் 70 சதவீத மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் 70 சதவீத மின்விளக்குகள் எரியவில்லை வாகன ஓட்டிகள் அவதி
Published on

வண்டலூர்,

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இப்படி செல்லும் வாகனங்களுக்கு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை உள்ள சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் சாலையின் நடுவில் சர்வீஸ் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 70 சதவீத மின் விளக்குகள் சரியான முறையில் எரிவது இல்லை, இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலைசந்திப்பு பகுதிகளில் கூட மின் விளக்குகள் எரியவில்லை.

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே மின் விளக்குகள் எரிகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ்நிறுத்தம், அதிக அளவில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடங்களில் ஒரு மின்விளக்கு கூட எரிவது இல்லை. இதனால் இருளில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சத்துடன் நிற்கவேண்டிய நிலை உருவாகி உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதை பயன்படுத்தி வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் சமீப காலத்தில் மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, பரனூர் சுங்கச்சாவடி உள்பட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாரிகள் சரியான முறையில் பராமரிப்பு பணிகள் செய்வது இல்லை, பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு சாலைகளை சீரமைப்பு செய்யும் போது ஏற்கனவே இருந்த சாலை அளவுக்கு சீரமைக்கும் போது சாலை போடுவது கிடையாது, மாறாக சாலை ஓரமாக 3 அடி அல்லது 2 அடி அளவில் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருப்புறங்களிலும் உள்ள உயர் மின் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை, இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லுவதற்கு வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் தினந்தோறும் இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் அதிமாக ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை சரி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், மேலும் வண்டலூர் மேம்பாலத்திலும் பெரும்பாலான மின்விளக்குகள் சரியான முறையில் எரிவது இல்லை. இதனையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com