

சிவகிரி,
சிவகிரி அருகே அஞ்சூரில் நொய்யல் ஆற்றங்கரையில் பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் 30 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப்பகுதி உள்ளது. இந்த பகுதி முழுவதும் பானை ஓடுகள், செங்கல் மற்றும் சுட்ட மண்பாண்டங்களின் உடைந்த பாகங்கள் சிதறி கிடக்கிறது. மேலும் இந்த பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக பெரிய கற்களை கொண்டு அடுக்கி வைக்கப்பட்ட சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு அதன் நடுவே மண்ணால் ஆன வீடுகள் இருந்து உள்ளன. ஆனால் அந்த வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் இடிந்து சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. சிறிய மேடை போன்ற அமைப்பும் ஆங்காங்கே காணப்படுகிறது. அதுபோல் மண்ணால் ஆன சிற்பங்கள் உடைந்த நிலையில் கிடக்கிறது.
அதுமட்டுமின்றி அங்கு 1,500 ஆண்டுகளுக்கு முந்தையை நடுகல்லும் உள்ளது. ஆற்றங்கரை ஓரத்தில் மனிதர்கள் நாகரிகம் தோன்றியது என்பதற்கு எடுத்துக்காட்டாக நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள அஞ்சூர் பகுதி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழைமையான நகரமாக காட்சி அளிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அஞ்சூருக்கு வந்து பார்வையிட்டு சென்று உள்ளனர். ஆனால் அகழாய்வுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. எனவே அஞ்சூர் பகுதியில் விரிவான அகழாய்வுகள் நடத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.