பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் சம்பவம்: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை துரத்திய புலி நூலிழையில் உயிர் தப்பினர்

பந்திப்பூர் வனப்பகுதி சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை புலி விரட்டிய சம்பவம் நடந்து உள்ளது. அந்த வாலிபர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.
பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் சம்பவம்: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை துரத்திய புலி நூலிழையில் உயிர் தப்பினர்
Published on

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூரில் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் உள்ளது. இந்தியாவில் அதிக புலிகள் வசிக்கும் சரணாலயம் என்று பந்திப்பூர் பெயர் பெற்று உள்ளது.

இந்த சரணாலயத்தையொட்டியுள்ள வனப்பகுதி வழியாக கேரளா, தமிழ்நாட்டுக்கு சாலை செல்கிறது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் இரவு நேரங்களில் பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் செல்லும் வாகனங்களால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும், இதனால் இரவு 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இரவு 6 மணிக்கு மேல் அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பந்திப்பூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் அமர்ந்து இருந்தவர் செல்போனில் வீடியோ எடுத்தப்படி சென்று கொண்டு இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டு இருந்த புலி, மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை துரத்தியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றனர். ஆனாலும் அவர்களை புலி சில அடி தூரம் விடாமல் துரத்தியது.

ஆனாலும் வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்று விட்டனர். பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. புலி துரத்தியதும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் 2 வாலிபர்களும் நூலிழையில் உயிர் தப்பினர்.

இதற்கிடையே வாலிபர்களை புலி விரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com