கேரளாவுக்கு செல்லும் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு செல்லும் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மூடை, மூடையாக ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளாவுக்கு செல்லும் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

நாகர்கோவில்,

சென்னையில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உஷாரான போலீசார் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக காத்திருந்தனர். இந்த ரெயில் வழக்கமாக காலை 9.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வரும். ஆனால் இந்த ரெயில் நேற்று 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையிலான போலீசார் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர். முதலில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் சோதனை நடந்தது. ஆனால் அங்கு ரேஷன் அரிசி மூடைகள் எதுவும் இல்லை. இதனையடுத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் போலீசா சோதனை நடத்தினர். அப்போது 3 பெட்டிகளில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரேஷன் அரிசி பறிமுதல்

தொடர்ந்து அனைத்து மூடைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதாவது மொத்தம் 55 மூடைகள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த எடை 1,330 கிலோ இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் மேலும் கூறுகையில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக ரேஷன் அரிசி மூடைகள் கேரளாவுக்கு கொண்டு செல்வதற்காக கோவில்பட்டி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவில் எந்த பகுதிக்கு கொண்டு செல்ல அரிசி மூடைகளை கடத்தி வந்தார்கள் என்ற விவரம் தெரியவரவில்லை. எனவே முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர்கள் தெரியவில்லை என்று கூறிவிட்டனர். இதன் காரணமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.

ஒப்படைப்பு

இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல நேற்று முன்தினம் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 1200 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com