

நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல்தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 64). இவர், தனது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து ஏசுதாசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், மாற்று உடையில் சென்று ஏசுதாசையும், அவரது வீட்டையும் போலீசார் நோட்டமிட்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஞானசெல்வன் தலைமையிலான போலீசார் நேற்று ஏசுதாஸ் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே மறைவான இடத்தில் ஒரு கேன் இருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்தபோது கேனில் 35 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சாராயத்தை கேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், ஏசுதாஸ் வீட்டில் சாராயத்தை ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சாராயம் விற்பனை செய்து வந்ததால் வீட்டுக்குள் அன்னியர்கள் யாரும் வராமல் இருப்பதற்காகவும், வேறு எவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவர், ஏராளமான நாய்களை வீட்டில் வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் சாராயவாடை அக்கம் பக்கத்திலும் பரவியதால் ஏசுதாஸ் மாட்டிக்கொண்டுள்ளார்.
எனினும் சாராயத்தை ஏசுதாசுக்கு விற்றவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. ஒரு வேளை குமரி மாவட்டத்திலேயே எவரேனும் சாராயம் காய்ச்சும் தொழிலில் இறங்கியிருப்பார்களோ? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏசுதாசை கைது செய்தனர்.