ஆன்லைன் மூலம் சாலை வரி செலுத்தும் வசதி கொண்டு வரப்படும் அமைச்சர் ஷாஜகான் தகவல்

வாகனங்களுக்கான சாலை வரியை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி விரைவில் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ‌ ஷாஜகான் கூறினார்.
ஆன்லைன் மூலம் சாலை வரி செலுத்தும் வசதி கொண்டு வரப்படும் அமைச்சர் ஷாஜகான் தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை அரசின் போக்குவரத்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கப்பட்ட வாகன் மற்றும் சாரதி மென்பொருள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்லைன் மூலமே வாகன உரிமம் மாற்றம் செய்தல், அடமானம் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் செய்தல், மாற்றுப் பதிவு சான்றிதழ், பதிவு சான்றிதழ் புதுப்பித்தல், வாகன மாற்றம் செய்தல் ஆகிய வசதிகளை பெற முடியும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள ஓட்டுநர் உரிம தேர்வு முறை மாற்றப்பட்டு கணினி மூலம் தேர்வுகள் தானியங்கி முறையில் நடத்தப்பட உள்ளது.

இந்த சேவைகளின் விரிவாக்க தொடக்க நிகழ்ச்சி போக்குவரத்துத்துறையின் கருத்தரங்கு அறையில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு புதிய விரிவாக்க சேவைகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை செயலாளர் ஷரண், ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய சேவைகளை தொடங்கிவைத்த அமைச்சர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநில மக்களின் சிரமத்தை குறைக்க ஆன்லைன் சேவைகளை அரசுத்துறைகளில் அறிமுகப்படுத்தி வருகிறோம். வீட்டில் இருந்த படியே இந்த சேவைகளை நாம் பெற முடியும். கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் அருகில் உள்ள கணினி மையங்கள் மூலம் இந்த சேவைகளை பெறலாம்.

இவற்றின் நோக்கமே காகித பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்குவதுதான். வருவாய்த்துறையிலும் மாணவர்கள் சான்றிதழ் பெறுவதை ஆன்லைன் சேவையில் கொண்டு வந்துள்ளோம். இதற்காக ஒரு செயலியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அந்த செயலி பயன்பாட்டிற்கு வந்ததும் செல்போன் மூலமே விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம். கோப்புகள் எங்கு உள்ளது? என்பதை கண்டறிய பைல் டிராக்கிங் சிஸ்டம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் எந்தெந்த கோப்புகள் எந்த அதிகாரியிடம் எத்தனை நாட்களாக உள்ளது? என்பதையும் கண்டறியலாம்.

வரும் காலத்தில் ஆன்லைன் மூலமே சாலை வரியை செலுத்தும் வசதியையும் ஏற்படுத்த உள்ளோம். இதன் மூலம் அரசின் சேவைகள் மக்களுக்கு துரிதமாக கிடைக்கும். நேர விரயமும் ஏற்படாது. இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com