ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க கோரி சேலத்தில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெரியசாமி, தர்மபுரி மண்டல தலைவர் வைத்திலிங்கம், நாமக்கல் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க கோரி சேலத்தில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்,

வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு அடைவதால் அதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் சியாமளநாதன், மாநில இணை செயலாளர் திருமுகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறும் போது, ஆன்லைன் வர்த்தகத்தினால் சிறு வியாபாரிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கத்தினர் மற்றும் மருந்து வணிகர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com