ஊட்டி படகு இல்லத்தில்: 48 நகர்வு கடைகளுக்கு மாற்று இடம் - கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை

ஊட்டி படகு இல்லத்தில் 48 நகர்வு கடைகளுக்கு மாற்று இடம் கேட்டு வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .
ஊட்டி படகு இல்லத்தில்: 48 நகர்வு கடைகளுக்கு மாற்று இடம் - கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி, ஊட்டி படகு இல்ல வியாபாரிகள் சங்கத்தினர் நகர்வு கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி படகு இல்லத்தில் 48 நகர்வு கடைகள் அமைக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த கடைகள் இருக்கும் இடத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆண்டுக்கு ஆண்டு படகு இல்லத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாலும், நகர்வு கடைகளுக்கு என்று தனியாக கட்டப்பட்ட தளத்தில், 48 நகர்வு கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 17 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கடைகளில் சுற்றுலாத்துறை மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தற்போது வியாபாரிகள் நகர்வு கடைகள் வைத்திருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து உள்ளனர். ஆனால், எங்களை நகர்வு கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கடை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்று சுற்றுலாத்துறையினர் அறிவித்து இருக்கின்றனர். நகர்வு கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம் குறுகலாகவும், சுற்றுலா பயணிகள் நடக்க அமைக்கப்பட்ட நடைபாதை சிறியதாகவும் உள்ளது. எனவே, 48 நகர்வு கடைகளை வேறு இடத்தில் அமைக்க மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும். அல்லது தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே கடைகளை வைக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பந்தலூர் அருகே அய்யங்கொல்லி மணல்கொள்ளி பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் அளித்த மனுவில், மணல்கொள்ளி பகுதியில் குரும்பர் இனத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் குடிசை வீடுகளில் சிரமத்துக்கு இடையே வாழ்கிறோம். குடிசை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஆதிவாசி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மூலம் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com