ஊட்டியில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டியில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டியில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஊட்டி நகரில் நள்ளிரவில் பெய்த மழையால் கடும் குளிர் நிலவியது.

நேற்று பகலில் மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குன்னூர், கோத்தகிரி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக ஊட்டியில் காலை முதலே கடும் பனிமூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதனால் வாகனங்களில் மஞ்சள் நிற விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் மலை முகடுகளில் இறங்கி வரும் பனிமூட்டத்தை பார்க்கவே அழகாக இருக்கிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-3.2, நடுவட்டம்-4, கிளன்மார்கன்-13, குந்தா -9, அவலாஞ்சி-12, எமரால்டு-9, கெத்தை-22, குன்னூர்-35, பர்லியார்-78, உலிக்கல்-40, எடப்பள்ளி-60, கீழ் கோத்தகிரி -44, கோத்தகிரி-24, கூடலூர்-14 உள்பட மொத்தம் 458.7 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 50.97 ஆகும். அதிகபட்சமாக பர்லியாரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. வருகிற நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com