ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகளை சுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவு; சுகாதாரம் இல்லாத 3 கடைகளுக்கு பூட்டு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகளை சுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். சுகாதாரம் இல்லாத 3 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகளை சுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவு; சுகாதாரம் இல்லாத 3 கடைகளுக்கு பூட்டு
Published on

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மார்க்கெட் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இங்கு பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், மளிகை பொருட்கள், தேநீர், துணி, புத்தகம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளை ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளிடம் குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும், கடை பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொதுமக்கள் நடந்து செல்லும் இடத்தில் இறைச்சிகளின் ரத்தம் படிந்து இருந்தது. உடனே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தியதோடு, கலெக்டர் கையுறை அணிந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளின் பொருட்கள் வெளியே வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் அனுமதிக்கப்படாத இடத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, நகராட்சி வாகனத்தில் ஏற்றப்பட்டன.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள், செய்தித்தாள்களில் பொதிந்து இறைச்சிகள் மக்களுக்கு கொடுக்கப்படுகிறதா? என்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது இறைச்சி கடைகளுக்கு முன்பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாய் சுகாதாரம் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலெக்டர் கடைகளை இன்று(நேற்று) மூடிவிட்டு, சுத்தம் செய்த பின்னர் கடைகளை திறக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கால்வாயில் சுத்தம் செய்தபோது, உள்ளே பல நாட்களுக்கு முன்பு வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகள் கிடந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. பின்னர் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடைகளில் வியாபாரிகள், உதவியாளர்கள் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினர்.

இதையடுத்து மீன் கடை ஒன்று சுத்தமாக வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து, கலெக்டர் அந்த வியாபாரியை பாராட்டி னார். அதனை தொடர்ந்து அங்கு மூடி வைக்கப்பட்டு இருந்த நம்ம டாய்லெட் மற்றும் கடைகளுக்கு முன்பு செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை பார்வையிட்டார். பின்னர் அங்கு சுகாதாரம் இல்லாமல் இருந்த 3 கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் நகராட்சி ஊழியர்கள் அந்த கடைகளுக்கு பூட்டு போட்டனர். இந்த நடவடிக்கையை தொடர்ந்து, வியாபாரிகள் பலர் கடைகளை சுத்தப்படுத்த முன்வந்தனர். அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று அரசு அலுவலர்கள், பொதுமக்கள் இணைந்து ஒரு இடத்தை தேர்வு செய்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் முறை தொடங்கப்பட்டு உள்ளது. நீலகிரி ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் சுகாதாரத்தை கடைப்பிடிக்காமல் இருப்பது, சுத்தமாக வைக்காதது என தொடர்ந்து இருப்பது தெரியவந்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஏனென்றால் அது பொதுமக்களின் சுகாதாரம். குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து கொடுக்காதவர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com