ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 35 கடைக்காரர்களுக்கு அபராதம்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 35 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 35 கடைக்காரர்களுக்கு அபராதம்
Published on

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மொத்தம் 1,300 கடைகள் உள்ளன. அதில் காய்கறி, மளிகை, பழக்கடைகள் திறந்தவெளி சந்தைகளுக்கு மாற்றப்பட்டது. ரேஷன் கடைகள், மொத்த விற்பனை கடைகள், நாட்டு மருந்து கடைகள் மட்டும் செயல்பட்டது. மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, அத்தகைய 195 கடைகளை சமூக இடைவெளி விட்டு சுழற்சி முறையில் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஏ, பி, சி என குறிப்பிட்டு தலா 65 கடைகள் அடுத்தடுத்த நாட்களில் திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குழு அமைப்பு

இதற்கிடையே அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர அனுமதிக்காத சில கடைகளும் செயல்பட்டு வருகின்றன. நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தும்போது, கடையை மூடி விட்டு, அவர்கள் சென்ற பிறகு கடையை திறப்பதாக தெரிகிறது. மேலும் சிலர் கடைகளை சுத்தம் செய்வதாக கூறி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

35 கடைக்காரர்களுக்கு அபராதம்

இந்த நிலையில் அந்த குழுவினர் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள் வரையப்பட்டு உள்ளதா?, கைகளை கழுவ தண்ணீர், கிருமிநாசினி வைக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணித்தனர்.

அப்போது ஒரு வளையல் கடையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டமாக நின்று இருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைக்காரர் ஏற்பாடு செய்யவில்லை. அதனை தொடர்ந்து அந்த கடைக்காரருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக கொரோனா அபராத ரசீது வழங்கப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 35 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com