

செய்யாறு,
வெம்பாக்கம் தாலுகா வடஇலுப்பை கிராமத்தினை ஒட்டியுள்ள பாலாற்றில் அரசு மணல் குவாரி திறக்க பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டேரி கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் தலைமையில் அரசு மணல் குவாரி சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சந்தர், சமூக பாதுகாப்பு தாசில்தார் துளசிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆய்வு கூட்டம் நடப்பதை அறிந்தவுடன் வடஇலுப்பை, செய்யனூர், சித்தனக்கால், சிறுநாவல்பட்டு மற்றும் பிரம்மதேசம் உள்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து உதவி கலெக்டர் அன்னம்மாளிடம் விவசாயத்தை பாதிக்க கூடிய மணல் குவாரியை திறக்க வேண்டாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உதவி கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.