தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அம்பை அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி, இடைகால், ரெங்கசமுத்திரம் கிராம மக்கள், தங்கள் ஊரை தென்காசி மாவட்டத்துடன் சேர்க்கக்கூடாது என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் ஊர் அம்பையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்துள்ள தென்காசி மாவட்டத்திலும், ஆலங்குளம் தாலுகாவிலும் எங்கள் ஊரை இணைப்பதாக தகவல் பரவி வருகிறது. எங்கள் ஊரை தென்காசி மாவட்டத்திலும், ஆலங்குளம் தாலுகாவிலும் சேர்க்கக்கூடாது. நெல்லை மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்தில் இருக்கும் எங்கள் ஊரை அம்பை குறுவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர், செங்களாகுறிச்சி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், மலையடிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் தாமரைகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். இதனால் குளத்திற்கு தண்ணீர் சரிவர வரவில்லை. எனவே கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி குளத்திற்கு தண்ணீர் தடையின்றி வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தையொட்டி உள்ள முட்புதர்களை அகற்றி அங்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று தமிழ்புலிகள் அமைப்பினர் மனு கொடுத்தனர்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பஞ்சாயத்து வினைதீர்த்தநாடார்பட்டி ஊர் மக்கள், தங்கள் ஊரில் பாலம் கட்டித்தரவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மேலப்பாளையம் அசோகாபுரம் மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்கள் ஊரில் வாசக சாலை கட்டப்படவுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் காமராஜர் நினைவு வாசக சாலை (சிறுகுழந்தைகள் படிப்பகம்) கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி உடனே படிப்பகம் கட்டித்தரவேண்டும் என்று கூறி உள்ளனர். இதேபோல் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி கல்லத்தி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அந்த ஊர் மக்கள் மனு கொடுத்தனர்.

தாமிரபரணி பார்வையற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் ஆத்தியப்பன், பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் பார்வையற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்து நாற்காலி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்ததால் எங்களால் இலவசமாக பஸ்சில் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாது. எனவே நெல்லை மண்டல போக்குவரத்து கழக பஸ்களில் மண்டல அளவில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தாமிரபரணி திருநெல்வேலி கால்வாய் நயினார்குளம் பாசன சங்கத்தினர் தலைவர் நெல்லையப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை நயினார்குளத்தில் 2-வது மடைக்கு மேல் கடை கட்டி ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் குளத்திற்கு உள்ளேயும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும். குளத்தை குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் கொடுத்து தூர்வார வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், காமராஜர் பிறந்தநாளையொட்டி மாவட்டந்தோறும் ஒரு குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் நெல்லை உடையார்பட்டி குளத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூர்வாரி சுத்தப்படுத்த அனுமதி வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் சலவையாளர் ஐ.ஓ.பி.காலனிக்கு குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

சேரன்மாதேவி அருகே மேலப்புதுக்குடியில் உள்ள ரெயில்வே கேட்டிற்கு உடனடியாக பணிக்கு ஆள் நியமித்து கேட் செயல்படவேண்டும் என்று மேலப்புதுக்குடி மக்கள் மனு கொடுத்தனர்.

சுரண்டை அருகே உள்ள குலையநேரி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள மாடசாமி கோவில் கொடை விழா உள்ளிட்ட அனைத்து கொடை விழாவையும் இருதரப்பினரும் சேர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கூட்டத்தில் 20 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2 லட்சத்து 13 ஆயிரமும், 4 பேருக்கு இலவச தேய்ப்பு பெட்டியும், 4 பேருக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி ரூ.9 லட்சமும் நிதி உதவி வழங்கப்பட்டது. இதை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com