புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா போராட்டம்

புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா போராட்டம்
Published on

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் கிராமத்தில் புதிய மதுக்கடை அமைக் கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதையடுத்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனர். அவர்கள் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இருசன்கொட்டாய் கிராமத்தைச் சுற்றி பாலஜங்கமனஅள்ளி, அட்டப்பள்ளம், கூன்மாரிக்கொட்டாய், வெத்தலஆத்துக்கொட்டாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள் உள்ளன. மதுக்கடை வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு மதுபிரியர்களால் இடையூறு ஏற்படும். எனவே இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது. மீறி அமைத்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com