மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாடு: வீட்டில் இருந்தே சமூகவலைதளத்தில் சூரிய கிரகணத்தை பார்த்த பொதுமக்கள்

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாட்டில், வீட்டில் இருந்தே சமூகவலைதளத்தில் சூரிய கிரகணத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.
மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாடு: வீட்டில் இருந்தே சமூகவலைதளத்தில் சூரிய கிரகணத்தை பார்த்த பொதுமக்கள்
Published on

நெல்லை,

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனை, சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிகழ்வுதான் சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நீடித்தது. அதிகபட்சமாக மதியம் 11.55 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்ச நேரம் என்பதால் சூரியன் தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு முறையில் வானில் நிகழும் இதுபோன்ற அற்புத நிகழ்வுகளை நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வந்து பொதுமக்கள் அங்குள்ள கண்ணாடி மூலம் பார்ப்பார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் அறிவியல் மையத்திற்கு வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் இதை பார்க்க நெல்லை மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சமூகவலைதளத்தில் பார்த்தனர்

மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி பைனாகுலரை பொருத்தி அதன் வழியே வரும் சூரியனின் பிம்பத்தை ஒரு வெள்ளை பரப்பில் விழச்செய்து அதை சமூகவலைதளத்தில் ஒளிபரப்பினார்கள். இதற்கு அறிவியல் மையம் சார்பில் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி மக்கள் வீட்டிலேயே இருந்த தங்களுடைய பேஸ்புக், யூ டியூப், கூகுள் மீட் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் பார்த்தனர். மதியம் 2 மணி வரை சுமார் 10 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் கூறுகையில், இந்த சூரிய கிரகணத்தில் உச்சக்கட்ட சூரியன் மறையும் நிகழ்வு பகல் 12.15 மணிக்கு நடந்தது. நெல்லையில் அந்த நேரத்தில் 30 சதவீத அளவு தான் தெரிந்தது. சரியாக தெரியவில்லை. 2027-ம் ஆண்டு நடைபெறும் சூரிய கிரகணத்திலும் இதேபோல் தான் தெரியும். அடுத்ததாக 2031-ம் ஆண்டு நடைபெறும் சூரியகிரகணத்தை நெல்லை மக்கள் முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com