

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி காலனி பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தர வேண்டும், என ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. விடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதையொட்டி மாவட்ட ஊராட்சி சார்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ18 லட்சத்தில் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பூமி பூஜை போடும் நிகழ்ச்சி மாடப்பள்ளி காலனி பகுதியில் நடந்தது. அதில் திருவண்ணாமலை தொகுதி சி.என். அண்ணாதுரை எம்.பி. மற்றும் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பூமி பூஜையை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்துப் பேசினர்.
நிகழ்ச்சியில் பருத்தி உழவர் சேவை கூட்டுறவு சங்க தலைவர் ஏ.தேவராஜ், துணைத் தலைவர் சாமிக்கண்ணு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஞானசேகரன் ஆதித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராமச்சந்திரன் நன்றி கூறினார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.