பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் வறண்டு போகும் நிலையில் பேச்சிப்பாறை அணை

பராமரிப்பு பணிக்காக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 1.80 அடியாகிவிட்டது. வறண்டு போகும் நிலையில் அணை இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் வறண்டு போகும் நிலையில் பேச்சிப்பாறை அணை
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை விளங்குகிறது. பெருஞ்சாணி, சிற்றார்1, சிற்றார்2, பொய்கை மற்றும் மாம்பழத்துறையாறு ஆகிய அணைகள் இருந்தாலும் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ ஆகிய இருபோக சாகுபடிக்கும் பேச்சிப்பாறை அணைதான் அதிக பாசன பகுதிகளுக்கு கைகொடுக்கிறது.

கடந்த ஆண்டு ஒகி புயலின்போது பெய்த பலத்த மழை காரணமாக அணை நீர்மட்டம் உச்சத்தை அடைந்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 46 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு, சாகுபடி பணிகளுக்காக திறக்கப்பட்டது.

சமீப காலமாக அணையை பராமரிக்கும் பணிகளுக்காக அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. தினமும் 600 கனஅடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அணை பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தண்ணீர் செல்லும் மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் அணையில் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 1.80 அடியாக ஆக சரிந்தது. அணையில் சிறிய இடத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்ற இடம் எல்லாம் வறண்டு வருகிறது.

ஆண்டு தோறும் ஜூன் 1ந் தேதி பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல்லாததால் பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் உள்ள தண்ணீரை பாசனத்துக்காக திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வறண்டு போகும் நிலையில் காட்சிதரும் பேச்சிப்பாறை அணையை தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விரைவாக தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பேச்சிப்பாறை அணையை தூர்வாருவது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அரசு அனுமதி வழங்கினால் பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com