பள்ளிகொண்டா, திருப்பாற்கடல் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பாற்கடல், பள்ளிகொண்டா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிகொண்டா, திருப்பாற்கடல் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு உற்சவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மூலவர் உத்திர ரங்கநாதர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாலை 6 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் திருவீதி உலாவும், 8 மணிக்கு நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

விழாவில் பள்ளிகொண்டா நகர அ.தி.மு.க. செயலாளர் உமாபதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஆனந்தன், உதவி ஆணையர் விஜயா, இணை ஆணையர் செ.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ரவிக்குமார், செயல் அலுவலர் வடிவேல்துரை, உற்சவ சேவா சங்க தலைவர் முதலியாண்டான்முதலி, செயலாளர் சுதர்சன், கவுரவ தலைவர் சீனிவாசன், பொருளாளர் நாராயணன், எழுத்தர்கள் பாபு, அரிஹரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் அணைக்கட்டில் உள்ள கல்யாண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 3 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது.

பின்னர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com