

கச்சிராயப்பாளையம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் சேலத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை முடித்துக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலைக்கு வந்தார். பின்னர் அவர் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி வந்தார். ஆனால் இப்போது நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வுக்கு அனுமதி அளித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் மணிமண்டபம் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்த பா.ம.க. வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இதை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. அ.தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்.
ஜெயலலிதா செய்து வந்த ஆட்சிக்கும், தற்போது நடைபெறும் ஆட்சிக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், கல்வராயன்மலையில் மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்கப்படும், கல்வராயன்மலை தனி தாலுகாவாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.
அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கோமுகி மணியன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பால்ராஜ் மற்றும் கல்வராயன்மலையை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.