நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தீவிரம் கலெக்டர் ரோகிணி ஆய்வு

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தீவிரம் கலெக்டர் ரோகிணி ஆய்வு
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகளை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வீட்டில் வசிக்கும் நபர்களின் பெயர், முகவரி, வயது போன்றவற்றை விசாரித்து பூத் சிலிப் கொடுக்க வேண்டும் என்றும், எந்த காரணத்தை கொண்டும் பூத் சிலிப்பை மொத்தமாக வழங்கக்கூடாது என்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதேபோல், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1,803 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வாக்குப்பதிவு நடைபெறும் ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கொங்கணாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி உள்பட பல்வேறு வாக்குப்பதிவு மையங்களிலும் மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com