

அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், ஒரே ஒரு தெருவுக்கு மட்டும் ஆண்டியூர் செல்லும் தார்சாலையில் இணைப்பு சாலை உள்ளது. மற்ற தெருக்களில் வசிக்கும் மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான இணைப்பு சாலைகள் இல்லை. இதனால் இணைப்பு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை எடுத்துச் செல்வதற்கான பாதை இல்லாததால் நேற்று கிராம மக்கள் பாதை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி உடலை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தும் அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன், தாசில்தார்கள் செல்வகுமார், முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஓரிரு நாட்களில் குடியிருப்பு பகுதிகளில் அளவீடு செய்து தெருக்களுக்கான இணைப்புச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதில் சமரசம் ஏற்படவில்லை. கிராமமக்கள் மாரியம்மாளின் உடலை வீட்டு அருகில் வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து இரவு வரை அதிகாரிகள் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை இருவேறு சமுகத்தினர் இடையிலானது என்பதால் மோதல்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.