சரத்பவார் பாராட்டு விழாவில் சிவசேனா மீது பட்னாவிஸ் கடும் தாக்கு

தன்னலம் கொண்ட நண்பனை (சிவசேனா) விட பெருந்தன்மையான எதிரிகள் மேலானவர்கள் என சரத்பவார் பாராட்டு விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
சரத்பவார் பாராட்டு விழாவில் சிவசேனா மீது பட்னாவிஸ் கடும் தாக்கு
Published on

மும்பை,

பாராளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சேவையாற்றிவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு அமராவதியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு சரத்பவாரை பாராட்டியும், கூட்டணி கட்சியான சிவசேனாவை தாக்கியும் பேசினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலில் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே கொள்கைகளை கடந்து அனைத்து கட்சியினரிடமும் நட்பு பாராட்டுகிறார்கள். அவர்களில் சரத்பவாரும் ஒருவர். அரசியல் ரீதியாக அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரச்சினைகள் ஏற்படும்போது, நாட்டின் நலனுக்காக தானாக முன்வந்து எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுக்கு வழிவகுப்பார். தன்னலம் கொண்ட நண்பனை (சிவசேனா) விட பெருந்தன்மையான எதிரிகள் மேலானவர்கள்.

கடன்தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைக்கான தீர்வு கிடையாது. ஆனால் பா.ஜனதா தலைமையிலான அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்வதை அவசியமான நடவடிக்கையாகவே கருதியது. அரசு இதற்கான முடிவை எடுக்கும் முன்பு நாங்கள் சரத்பவாரை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டோம். அவர் எங்களை டெல்லிக்கு அழைத்து பேசினார். நாட்டின் நலன் என்று வந்துவிட்டால் சரத்பவார் எங்களுடன் இணைந்தே செயல்படுவார்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

சிவசேனா, பா.ஜனதாவும் கட்சிகள் இடையே தற்போது இணக்கம் இல்லாத சூழ்நிலையில் தன்னலம் கொண்ட நண்பனை விட பெருந்தன்மையான எதிரிகள் சிறந்தவர்கள் என்று பட்னாவிஸ் கூறியிருப்பது சிவசேனாவை மறைமுகமாக தாக்கி பேசியதாகவே கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com