

பெரம்பலூர்,
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பணிபுரியும் மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 பணிபுரியும் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் மதிப்பில் மானிய விலையிலான அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (குன்னம்), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்) மற்றும் மருதராஜா எம்.பி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா, பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை உற்றுநோக்கி பிற மாநிலங்கள் மற்றும் நாடுகள் தங்கள் பகுதிகளிலும் சிறப்பாக செயல் படுத்துவதற்காக, பல்வேறு வகையான குழுக்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதங்கள் குறித்து தெரிந்துகொண்டு, தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த ஆவன செய்து வருகின்றன. அத்தகைய ஒரு புரட்சிகரமான திட்டம் தான் பணிக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலை ஸ்கூட்டர் ஆகும்.
பெண்கள் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழவும், தைரியத்துடன் பிரச்சினைகளை தன்னிச்சையாக எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அம்மா ஸ்கூட்டர் பணி புரியும் மகளிருக்கு உதவி கரமாக இருக்கும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.