தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதல்; 13 மாணவ-மாணவிகள் காயம்

பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 13 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதல்; 13 மாணவ-மாணவிகள் காயம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் வெங்கடேச புரம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த பஸ் ஒன்று நேற்று காலை வழக்கம் போல் அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை லாடபுரம் புதுஆத்தூரை சேர்ந்த வேலுசாமி (வயது 57) என்பவர் ஓட்டி வந்தார். இதற்கிடையில் செஞ்சேரி மெயின்ரோடு பகுதியில் அந்த பஸ் நின்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியிலிருந்து கிரசர் பவுடர் ஏற்றி கொண்டு வந்த லாரியானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டிருந்த பஸ்சின் பின்னால் மோதியது. இதில் பஸ் குலுங்கியதில் பஸ்சின் இருக்கையில் இருந்த மாணவ-மாணவிகள் தவறி பஸ்சுக்குள்ளே விழுந்து காயமடைந்தனர். இதில் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஹரிணி (வயது 12), மேனகா (10), தமிழ்செல்வி (10), கோகுலநாதன் (8), விஷ்வா (6), மதன்ராஜ் (11), குரும்பலூர் பாளையத்தை சேர்ந்த சர்வேஸ்வரன் (7), ஈச்சம்பட்டியை சேர்ந்த ஜெகதீஸ் (7) உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் பதறி அடித்து கொண்டு வந்து மாணவ-மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே லாரியின் டிரைவர் கீழே குதித்து தப்பியோடிவிட்டார். துறையூர் ரோடு பகுதியிலுள்ள அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த நிலையில் விபத்து சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதால் பெற்றோர் உள்ளிட்டோர் பதற்றத்துடன் அங்கு திரண்டனர். பின்னர் குழந்தைகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதை தெரிந்த பின்னர் தான் அவர்கள் சற்று நிம்மதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் மற்றும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் உள்பட போலீசார் விரைந்து வந்து, கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இந்த விபத்து குறித்துபெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியில் திடீரென பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, செஞ்சேரி மெயின்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தோம். இதையடுத்து வேகத்தடை அமைக்க அனுமதி பெறப்பட்ட போதும் கூட நெடுஞ்சாலைத்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே விபத்தினை தடுக்கும் பொருட்டு இப்பகுதியில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றனர். விபத்து குறித்து விசாரித்து கொண் டிருந்த பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாபுராமன் ஆகியோர் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com