

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூரில் இருந்து மேட்டுப் பாளையம் வழியாக அனுக்கூருக்கு 16 ஏ என்கிற அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை மூலம் மாணவ- மாணவிகள் சென்று வந்தனர்.
மேலும் அந்த பஸ் காலை 8.45 மணிக்கு அனுக்கூருக்கும், மாலை 4.30 மணிக்கு அனுக்கூரில் இருந்து பெரம்பலூருக்கும் இயக்கப்பட்டதால், அனுக்கூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, அந்த கிராமத்தை சுற்றியுள்ள மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் வந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது அந்த பஸ் வேறொரு நேரத்தில் இயக்கப்படுவதால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதால் படிப்பும் பாதிக்கப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இயங்கிய நேரத்தில் அந்த அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏற்கனவே இயங்கியது போல், அனுக்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த அன்வர்பாஷா கொடுத்த மனுவில், கீழப்புலியூர் கிராமத்தில் வடக்கு பகுதியில் உள்ள அரசு நிலத்தை 2 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, எனது நிலத்தில் விவசாயம் செய்வதற்கு இடையூறாக உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர்கள் மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம்இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 230 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் கூட்டத்தில் கலெக்டர் சாந்தா வேப்பந்தட்டை தாலுகா பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ரஹமத்துல்லா மகன் இர்ஷாத் அஹமது என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். அதற்கு இழப்பீடாக அவரது தந்தையிடம் முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து, பணியின் போது உயிரிழந்த சங்கர் என்பவரின் மகன் பிரபாகரனுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையையும் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 5-வயது வரையுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், பலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையினை அறிந்து அவர்களுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் குழந்தைகளுக்கு குள்ளத்தன்மை மற்றும் மெலிதலை குறைத்தலை போஷான் அபியான் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை சிறப்புடன் செயல்படுத்தும் பொருட்டு அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் 4 வளர்ச்சி கண்காணிப்பு கருவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி, மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.