பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகங்கையில் கடையடைப்பு; மறியலில் ஈடுபட்ட 83 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகங்கையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் மறியலில் ஈடுபட்ட 83 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகங்கையில் கடையடைப்பு; மறியலில் ஈடுபட்ட 83 பேர் கைது
Published on

சிவகங்கை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பல்வேறு இடங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. மக்களின் அவசர தேவைக்காக மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. இருப்பினும் பஸ், ஆட்டோ, வேன் மற்றும் கார்கள் வழக்கம் போல் ஓடின.

சிவகங்கை பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்டு மாவட்ட அமைப்பாளர் ஜீவா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மறியல் செய்த 83 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைதுசெய்தனர்.

காரைக்குடி பெரியார் சிலை முன்புள்ள பெட்ரோல் பங்க் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தலைமையிலும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாநில இலக்கிய அணி அப்பச்சி சபாபதி, சங்கராபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாங்குடி, ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் களஞ்சியம், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி, நகர செயலாளர் குமரேசன், தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன், தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி மலையரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணை செயலாளர் இளையகவுதமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் காரைக்குடி நகரில் 80 சதவீத கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோன்று திருப்பத்தூரில் மதுரை சாலை, நான்கு ரோடு, பஸ் நிலைய பகுதி என கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும் மானாமதுரை, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அவற்றில் பல கடைகள் மதிய நேரத்தில் திறக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com