பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி சோதனை மேற்கொண்டார். அப்போது 7 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செங்கோடு-எருமப்பட்டி

வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா சோதனை மேற்கொண்டார். இதையடுத்து 2 கிலோ பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வெண்ணந்தூர் ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்வேல், பாஸ்கர் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 11 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.6,600 அபராதம் விதிக்கப்பட்டது.

எருமப்பட்டி அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது ரெட்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் ரமேஷ் உடனிருந்தார். திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஜான் ராஜா, நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் திருச்செங்கோடு பகுதியில் நடத்திய சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை-எலச்சிபாளையம்

நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் சதாசிவம் சோதனை மேற்கொண்டனர். அப்போது 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் வேல்முருகன் சோதனை மேற்கொண்டார். மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. பரமத்தி, வேலூர், பொத்தனூர் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் அந்தந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் சோதனை செய்தனர்.

எலச்சிபாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், விஜயகுமார் கடைகளில் சோதனை செய்தனர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, ரூ.1,800 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலாவதி, அகரம் பஞ்சாயத்து செயலாளர் பொன்னுவேல் உடன் சென்றனர்.

சேந்தமங்கலம்

பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, கண்ணன் ஆகியோர் கந்தம்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது மணியனூர் ஊராட்சி செயலாளர்கள் ராஜா, மகேஸ்வரி உடன் சென்றனர். படவீடு தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் ஆறுமுகம், துப்புரவு மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தமிழ்செல்வி, ஊராட்சி செயலாளர் செல்வகுமார் ஆகியோர் பேளுக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் வாழவந்திநாடு, எடப்புளிநாடு ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதேஸ்வரன், அருளப்பன் ஆகியோர் சோதனை நடத்தினர். இதையடுத்து ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com