போலீசாரின் கவனக்குறைவு: ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக அபராதம்

குளச்சல் அருகே ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்ததால் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீசாரின் கவனக்குறைவு: ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக அபராதம்
Published on

பத்மநாபபுரம்,

குளச்சல் அருகே இரும்புலி பகுதியை சேர்ந்தவர் செல்வாகரன். ஆட்டோ டிரைவர். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோவை ஓட்டாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு குலசேகரம் போலீசாரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், அவரது ஆட்டோவின் பதிவெண்ணுடன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது. இதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆட்டோ ஓட்டாமலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதே என மனதுக்குள் புலம்பிய அவர், இணைய தளத்துக்கு சென்று அபராதம் எவ்வளவு விதிக்கப்பட்டுள்ளது என தேடினார்.

டிரைவர் அதிர்ச்சி

அதில், ஆட்டோ பதிவெண் கூடிய முழு விவரங்களுடன் அபராத தொகை ரூ.1,600 விதிக்கப்பட்டிருந்தது. ஹெல்மெட் அணியாமலும், போதிய ஆவணங்கள் இல்லாமலும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவர் செல்வாகரன் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நான் ஆட்டோவை ஓட்டாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளேன். இந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக போலீசாரிடம் இருந்து வந்த குறுந்தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், ஹெல்மெட் அணியாமல் குலசேகரம் பகுதியில் ஆட்டோ ஓட்டியதாக குறிப்பிட்டுள்ள விவரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. போலீசாரின் கவனக்குறைவால் இந்த தவறு நடந்திருக்கலாம், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com