தரமற்ற ‘ஹெல்மெட்’ விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தரமற்ற ‘ஹெல்மெட்’ விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தரமற்ற ‘ஹெல்மெட்’ விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இருசக்கர வாகனம் ஓட்டும் நபரும், அதில் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் 150 இடங்களில் ஹெல்மெட் அணிவது குறித்து ஊர்வலம், துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதைத்தவிர 30 பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாத 4 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத 40 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வீதம் ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து விபத்துகளையும், உயிர்பலியையும் தவிர்க்க வேண்டும். போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகன ஷோரூம்களில் புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் அளிக்கும்படி அறிவுறுத்த உள்ளோம்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சாலையோரங்களில் தரமற்ற ஹெல்மெட் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களில் பிரஸ், போலீஸ், ஆர்மி என போலி ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 60 சதவீதம் போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள போலீஸ் நிலையங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாவட்டம் முழுவதும் 15 சதவீதம் போலீஸ் பற்றாக்குறை காணப்படுகிறது.

வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பெர்மிட் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக கலெக்டரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு விரைவில் சுரங்கபாதை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com