முழு அடைப்பில் அரசியல் உள்நோக்கம் பா.ஜனதா கண்டனம்

நாடுதழுவிய அளவில் 2 நாள் நடைபெறும் முழு அடைப்பில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கூறி பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
முழு அடைப்பில் அரசியல் உள்நோக்கம் பா.ஜனதா கண்டனம்
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளரும், கர்நாடக மேல்-சபை உறுப்பினருமான ரவிக்குமார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

அரசியல் உள்நோக்கம்

கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மத்திய அரசின் பொருளாதார கொள்கை ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துவது அர்த்தமற்றது. உண்மை நிலைக்கும், இதற்கும் நீண்ட இடைவெளி உள்ளது.

மக்களின் கவனத்தை திசை திருப்ப தவறான தகவல்களை வெளியிட்டு முழு அடைப்பை நடத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும். நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது. சரக்கு-சேவை வரி திட்டம் அமலுக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட் களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

புறக்கணிக்க வேண்டும்

அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இது மோடி அரசு மேற்கொள்ளும் திட்டம் அல்ல. இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலும் பாதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த போராட்டத்தை கர்நாடக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com