ஜனாதிபதி வருகையையொட்டி: புதுச்சேரி விமான நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு

ஜனாதிபதியின் வருகையையொட்டி புதுவை விமான நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆய்வு நடத்தினார்.
ஜனாதிபதி வருகையையொட்டி: புதுச்சேரி விமான நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக அவர் விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி விமானம் நிலையம் வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையையொட்டி புதுவையில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுவை விமான நிலையம், காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகம் போன்றவற்றில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

விமான நிலையத்தை பார்வையிட்ட அவர் அங்கு செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வழிநெடுகிலும் செய்யவேண்டிய போலீஸ் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

விமான நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக காலாப்பட்டு சென்ற அவர் விழா நடைபெற உள்ள ஜவகர்லால் நேரு அரங்கத்தையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், நிகரிகா பட், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேல், சுபம் கோஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்களிடம் பல்கலைக்கழகத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com